இன்று நள்ளிரவு அமலாக இருக்கும் ஜிஎஸ்டி வரியால் திரையங்க கட்டணங்கள் அதிகரிக்கின்றன. மாநில மொழிப் படங்களுக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனும் கோரிக்கையை தயாரிப்பாளர் சங்கம், வினியோஸ்தர்கள் சங்கம் ஆகியவை வலியுறுத்தி வருகின்றன. ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் வார இறுதியில் வெளியாகும் படங்களின் புக்கிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை டிக்கெட் விலை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரையரங்க கட்டணம் 100 ரூபாய்க்கு குறைவாக இருப்பின் 18 சதவீதமும், 100 ரூபாய்க்கு அதிகமானால், 28% சதவீதமும் ஜி.எஸ்.டி வரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் நிலையில், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட வர்த்தக சபை போன்றவை தொடர்ந்து மாநில மொழிப் படங்களுக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. இதனால், நாளைக்கான டிக்கெட் விலை குறித்த குழப்பத்தால், அனைத்து திரைப்படங்களுக்கும் இன்றைக்கான் டிக்கெட்டை மட்டுமே திரையரங்குகள் விற்பனை செய்து வருகின்றன. இன்று வெளியாகும் தமிழ், திரைப்படங்களுக்கும், நாளைக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படவில்லை. இந்நிலையில், இன்று மாலை திரைப்பட வர்த்தக சபை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதன்பிறகே டிக்கெட் விலை குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமனாதன் தெரிவித்துள்ளார்.