தமிழ்நாடு

வீட்டில் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்த இளைஞர் - கொலையா? தற்கொலையா?

webteam

கோவையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்து வந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி கிராமம் அருகே இருக்கும் அரசிலாம் பட்டியைச் சேர்ந்தவர் சாமியப்பன். இவரது மகன் தர்மதுரை (32). சாமியப்பன் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர். இவரது மகன் தர்மதுரை கோவையில் முதுநிலை படித்தார். அதன்பின் கோவையிலேயே தங்கி வெளிநாட்டு வேலையில் சேர்வதற்காக முயற்சித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தர்மதுரையை தொலைப்பேசியில் அவரது பெற்றோர் தொடர்பு கொண்டும் பேச முடியவில்லை எனத் தெரிகிறது. ஆகவே சந்தேகமடைந்த அவரது பெற்றோர், வீட்டின் உரிமையாளரை அழைத்து விசாரிக்க சொன்னதாகக் கூறப்படுகிறது. அதனையடுத்து வீட்டின் உரிமையாளர் வந்து பார்த்தபோது, அறையில் தூக்கிட்ட நிலையில் தர்மதுரை இருந்துள்ளார்.

அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர், காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இரத்தினபுரி காவல்துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தர்மதுரையின் வீட்டின் ஒரு கதவு மூடப்பட்டும் மற்றொரு கதவு சிறிது திறந்தும் இருந்துள்ளது.

மேலும் அவரது உடல் புழு வைத்து அழுகிய நிலையில் இருந்ததால், கடந்த 2 ஆம் தேதியே மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஆகவே தர்மதுரையின் லேப்டாப் மற்றும் செல்போன் ஆகியவற்றைக் கைப்பற்றி, இது கொலையா? அல்லது தற்கொலையா எனக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.