தமிழ்நாடு

இளைஞரின் துண்டான உள்ளங்கை மீண்டும் வெற்றிகரமாக பொருத்தம்: கோவை அரசு மருத்துவமனை சாதனை

Sinekadhara

குடும்பத் தகராறில் அரிவாளால் வெட்டப்பட்டதில் வலது கை துண்டிக்கப்பட்ட நிலையில் வந்த இளைஞருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அந்தக் கையை மீண்டும் உடலில் இணைத்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே எளிதில் சாத்தியமாகக்கூடிய இத்தகைய அறுவை சிகிச்சையை சாத்தியப்படுத்தியது எப்படி? இவ்வாறு உடலுறுப்புகள் துண்டிக்கப்படும்போது அவற்றை மருத்துவமனைக்கு எவ்வாறு கொண்டு வர வேண்டும் என மருத்துவர்கள் கூறும் அறிவுரை என்ன?

திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வரும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் கணேஷ் என்பவரது வலது உள்ளங்கை அரிவாளால் வெட்டப்பட்டு துண்டிக்கப்பட்ட நிலையில், உடல் முழுக்க பல வெட்டுக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ஆம் தேதி சேர்ந்துள்ளார். வாழ்வாதாரம் ஈட்டவும் அனைத்துவித செயல்பாடுகளுக்கும் ஆணிவேராக பார்க்கப்படும் வலது கை துண்டான நிலையில் 21 வயது மட்டுமே நிரம்பிய இளைஞர் ஒருவர் வந்ததை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அதிக வெட்டு காயங்களால்‌ இளைஞருக்கு அதிகளவில் இரத்த இழப்பு ஏற்பட்டிருந்தது. அவர்கள்‌ துண்டிக்கப்பட்ட கைப்‌ பகுதியினை சுத்தமான ஈரத்துணியில்‌ சுற்றி பிளாஸ்டிக்‌ பையில்‌ வைத்துக்‌ கட்டி அதனை ஐஸ்கட்டிகள்‌ நிறைந்த பெட்டியில்‌ வைத்து கைப்பகுதி நேரடியாக ஐஸ்கட்டியில்‌ படாதவாறு பாதுகாத்து எடுத்து வந்திருந்தனர்‌.

மேலும்‌ அவரை பரிசோதித்த கோவை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள்‌ (துறைத்‌ தலைவர்‌: V.P.ரமணன்‌, R.செந்தில்குமார்‌, S.பிரகாஷ்‌, A.கவிதாபிரியா, S.சிவக்குமார்‌, மயக்கவியல்‌ நிபுணர்‌ சதிஷ்‌ ) துண்டிக்கப்பட்ட கையினை அறுவைசிகிச்சை மூலம் இணைக்க முடிவு செய்தனர்‌.

உடனடியாக அவருக்கு ரத்தம் செலுத்தி அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்தனர். சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர். எலும்புகள்‌, தசை நரம்புகள்‌, இரத்தக்‌ குழாய்களை இணைக்கும் இந்த சவால் நிறைந்த அறுவை சிகிச்சையினை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்முறையாக செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர். அறுவைசிகிச்சை முடிந்து 20 நாட்கள்‌ ஆகிவிட்ட நிலையில் இளைஞரின் கை வழக்கம்போல செயல்பட தொடங்கி உள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

வெட்டப்பட்ட கையினை நேரடியாக ஐஸ் கட்டி உள்ளிட்டவற்றில் படாதவாறு உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றியும் சரியான நேரத்தில் கொண்டு வந்ததால் இளைஞருக்கு உடலில் கையினை சேர்க்க முடிந்ததாக கூறுகிறார் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் நிர்மலா. கைகள் துண்டிக்கப்படும் சிக்கலான சூழ்நிலைகளில் பதற்றமின்றி செயல்பட வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.