தமிழ்நாடு

நிறுத்தப்பட்ட கிருஷ்ணா நீர் - சென்னையில் குடிநீர் பற்றாக்குறை?

நிறுத்தப்பட்ட கிருஷ்ணா நீர் - சென்னையில் குடிநீர் பற்றாக்குறை?

webteam

சென்னையில் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என அஞ்சப்படும் நிலையில், ஆந்திர அரசு கிருஷ்ணா நதி நீரை நிறுத்தியுள்ளது.

சென்னையின் குடிநீருக்காக ஆந்திராவில் இருந்து ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீர் திறந்து விட போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஜூலை முதல் அக்டோபர் வரையில் 8 டிஎம்சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 4 டிஎம்சி தண்ணீரையும் ஆந்திர அரசு தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும். அந்த வகையில் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து 1750 கன அடி திறக்கப்பட்டு, படிப்படியாக 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை படிப்படியாக ஆந்திர அரசு குறைத்து வந்தது. இன்னும் 2 நாட்களில் ஆந்திர அரசு கிருஷ்ணா நதி நீரை முழுமையாக நிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில், இன்று கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு திறக்கப்பட்ட தண்ணீரை ஆந்திர அரசு நிறுத்தியுள்ளது.

இந்த பருவத்தில் 4 டிஎம்சி தண்ணீர் தரப்பட வேண்டிய நிலையில், காலதாமதமாக பிப்ரவரியில் நீர் திறந்து விடப்பட்டதில் தற்போது வரை 0.4 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இதனால் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.  குடிநீர் பற்றாக்குறையை போக்க மாற்று ஏற்பாடுகளை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.