தமிழ்நாடு

ஊரடங்கால் முடங்கிய கிராமம்.. தாங்களாகவே முடிவெட்டிக்கொள்ளும் இளைஞர்கள்..!

ஊரடங்கால் முடங்கிய கிராமம்.. தாங்களாகவே முடிவெட்டிக்கொள்ளும் இளைஞர்கள்..!

webteam

கொரோனா எதிரொலியாக ஓமலூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களுக்கு தாங்களாகவே முடி வெட்டி கொள்வது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால், அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏழை எளிய மக்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு அண்மையில் பதிலளித்த மோடி தன்னை மன்னித்துவிடும் படியும், தனக்கு வேறு வழி தெரியவில்லை எனவும் கூறினார்.

இந்நிலையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் இளைஞர்கள் பலரும் தலை முடியை வெட்டி கொள்ளாமலும், முகச் சவரம் செய்யாமலும் சுற்றி வந்தனர். இந்நிலையில் பொறுத்து,  பொருத்து பார்த்த இளைஞர்கள் ஒரு கட்டத்தில், தாங்களாகவே தலைமுடி வெட்ட தொடங்கியுள்ளனர். கொரோனாவால் வந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக இதுபோன்ற அவசர தேவைகளை கற்று கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாக இளைஞர்கள் தெரிவித்தனர். இளைஞர்கள் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி அவர்களாகவே முடி வெட்டி தலையை சீரமைக்கும் காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.