தமிழ்நாடு

கடலூர்: பறவை இனத்தை பாதுகாக்க பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடும் கிராமம்

kaleelrahman

அழிந்துவரும் பழம் திண்ணி வவ்வால் இனத்தை பாதுகாக்கும் வகையில், கிராமப்புற இளைஞர்கள் வவ்வாலுக்காக பழம் தரும் மரங்களை வளர்ப்பதோடு பட்டாசு வெடிக்காமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தைச் சுற்றிலும் அரசு காப்புக் காடுகள் உள்ளது. இந்த காப்புக் காடுகளில் உள்ள உயரமான மரங்களில் ஆயிரக்கணக்கான பழந்திண்ணி வவ்வால்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், பழந்திண்ணி வவ்வால்களுக்குத் தேவையான பழம் தரக்கூடிய அத்திமரம், இலுப்பை, அரசமரம், ஆலமரம், புளியன் உள்ளிட்ட அதிக உயரம் வளரக்கூடிய மரங்களை அப்பகுதி இளைஞர்கள் வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இயற்கையோடு ஒன்றி வாழும் அப்பகுதி மக்கள், பாலூட்டி பறவை இனமான வவ்வாலை தங்கள் கிராமத்தின் அடையாளமாக போற்றி பாதுகாத்து வருகின்றனர். இதனால் தீபாவளி பண்டிகையின்போது அதிகம் ஒலி எழுப்பும் பட்டாசு வெடிப்பதை பல ஆண்டுகளாக தவிர்த்து வருகின்றனர்.

இதுபோல் அனைத்து கிராம மக்களும் அழிந்து வரும் பறவை இனத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டும் எனவும், உயரமாக வளரக்கூடிய மரங்களை வளர்க்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்,