தமிழ்நாடு

மாட்டுக்கறிக்கு ஆதரவாக இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன ஹேஸ்டேக்

webteam

நாகையில் மாட்டுக்கறி சூப் சாப்பிட்டதாக இளைஞர் தாக்கப்பட்ட நிலையில், மாட்டுக்கறி உண்பதற்கு ஆதரவாக ஹேஷ்டேக்ஸ் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

நாகை மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்தவர் முகம்மது பைசான். இவர் மாட்டுக்கறி சூப் சாப்பிட்டதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேர் அவரைச் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் முகம்மது பைசான் என்பவரை தாக்கியதாக தினேஷ் குமார், கணேஷ் குமார், மோகன் குமார் , அகஸ்தியன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது 5 பிரிவுகளில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்நிலையில் ட்விட்டரில் மாட்டுக்கறிக்கு ஆதரவாக ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. #Beef4life, #WeLoveBeef, #BeefForLife ஆகிய ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன. 

''எனது உணவு எனது உரிமை'' எனக்கூறி பலரும் மாட்டுக்கறி உண்பதற்கு ஆதரவாகவும், ''விலங்குகளை நேசிப்பவர்கள் மாட்டுக்கறியை உண்ணமாட்டார்கள்'' எனக்கூறி பலரும் மாட்டுக்கறி உண்பதற்கு எதிராகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.