தமிழ்நாடு

திருவிழாவிற்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்: காஞ்சிபுரத்தில் சோகம்

webteam

விச்சந்தாங்கலில் கிராம கோயில் திருவிழா ஊர்வலத்தின் போது 13 வயது சிறுமியின் தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கி படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காண்டீபன் - லதா தம்பதியர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் காஞ்சனாவை சென்னையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் என்பவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு லாவண்யா (13) என்ற ஒரு மகளும் புவனேஷ் (9) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் சரவணனின் மனைவி காஞ்சனா குடும்ப பிரச்னை காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சரவணன், தனது குழந்தைகளான லாவண்யா மற்றம் புவனேஷை விச்சந்தாங்களில் உள்ள தாத்தா பாட்டியிடம் விட்டு விட்டு சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழைமை விச்சந்தாங்கலிலுள்ள அங்காளம்மன் கோவிலில் திருவிழாவின் கடைசி நாள் விழா நடைபெற்றது.

அப்போது விச்சந்தாங்கல் ஊர் நாட்டமையான காண்டீபன் மற்றும் பலரும் மாட்டுவண்டியின் முன்புபுறம் அமர்ந்தபடி சென்ற நிலையில், காண்டீபன் தனது பேத்தியான லாவண்யாவை உடன் வர வேண்டாம் கூறி வீட்டிற்கு அனுப்பியதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் சிறுமி லாவண்யா தனது தாத்தாவிற்கு தெரியாமல் மாட்டுவண்டியின் பின்புறம் அமர்ந்தப்படி சென்றுள்ளார். அப்போது திடீரென மாட்டு வண்டியின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த ஜென்ரேட்டரில் லாவண்யாவின் தலைமுடி சிக்கிய நிலையில் லாவண்யா படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து லாவண்யாவை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சகிசைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மாகரல் போலீசார், வழக்குப் பதிவு செய்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து உரியவர்களிடம் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோயில் திருவிழாவில் 13 வயது சிறுமி ஜெனரேட்டரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.