தமிழ்நாடு

தாரமங்கலம் பாரம்பரியம் மிக்க கத்தி போடும் திருவிழா

webteam

தாரமங்கலம் அருகே ஶ்ரீராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் தொட்டப்ப பெருவிழாவில் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க விளையாட்டான கத்தி போடும் திருவிழா நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள தாரமங்கலம் அருகே ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் ஜகஜாத்ரே தொட்டப்ப பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் தொடங்கி நடைபெறும். அதன்படி நேற்று துவங்கிய தை முதல் நாள் திருவிழாவை தொடர்ந்து இன்று ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் பெருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தமிழர்களின் பாரம்பரியமான கத்திபோடும் திருவிழா நடைபெற்றது. 

இந்த விழாவில் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கத்திபோட்டு சிறப்பாக விளையாடி மகிழ்ந்தனர். கத்தியை மார்பிலும், முதுகிலும் படும்படி போட்டு ஆடினர். 

அப்போது கத்திபட்டு ரத்தம் வடிந்த நிலையிலும் இளைஞர்கள் கத்திபோட்டனர். இளைஞர்களை மிஞ்சும் வகையில் சிறுவர்களும் கத்திபோட்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மேலும் இந்தத் திருவிழாவில் குழந்தைகளின் புல்லாங்குழல் நடனமும் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. இந்தத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.