தமிழ்நாடு

சென்னையில் காரில் வந்து ஆடுகளை திருடும் நூதன திருடர்கள்

சென்னையில் காரில் வந்து ஆடுகளை திருடும் நூதன திருடர்கள்

webteam

மதுரவாயலில் இரவு நேரங்களில் காரில் வந்து ஆடுகளை திருடி வந்த நூதன திருடர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு, இவர்களிடமிருந்து கார் ஒன்றையும் பறிமுதல் செய்து மதுரவாயல் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் நேற்று இரவு மதுரவாயல் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியே வந்த காரை மடக்கி விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள். மேலும் காருக்குள் பார்த்தபோது ஆடு ஒன்று இருந்தது. அதுகுறித்த கேட்டபோது மதுரவாயல், வடக்கு மாதா தெருவை சேர்ந்த பிரவீன்குமார், என்பவரது வீட்டில் இருந்த ஆட்டை திருடி வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். 

இதில் பிடிபட்டவர்கள் மதுரவாயலை சேர்ந்த சதீஸ்குமார், புதுக்கோட்டையை சேர்ந்த சசிகுமார், என்பது தெரியவந்தது. இருவரும் சேர்ந்து கொண்டு இரவு நேரங்களில் காரில் வந்து ஆடுகளை திருடி வந்துள்ளனர். அவ்வாறு திருடிய ஆடுகளை தனியார் ஹோட்டல்கள் மற்றும் இறைச்சி கடைகளுக்கு விற்று வந்துள்ளனர். இவர்கள் மீது செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் இருந்து ஒரு ஆடு மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.