ஊரடங்கில் கூடுதலாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், குற்றால அருவிகளில் குளிப்பதற்கான தடை தொடர்வதாக தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா முதல் அலையால் கடந்த ஆண்டு 6 மாதங்கள் மூடப்பட்டிருந்த சுற்றுலாத் தலங்கள், இரண்டாவது அலையால் கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் மூடப்பட்டன. இந்நிலையில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம், காட்சி முனைகள் ஆகியவை இன்று முதல் திறக்கப்பட்டு உள்ளன. மேலும் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழக அரசு அறிவித்த கூடுதல் தளர்வுகளால், தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு பயணிகள் வருகை அதிகரிக்கும் எனும் நம்பிக்கையில், அங்கு பூட்டிக் கிடந்த பல கடைகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், அருவிக்கு அருகே யாரும் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைத்து, தடை நீடிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள், உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.