தமிழ்நாடு

சொந்த நாடு திரும்ப சூடான் இளைஞருக்கு கருணை காட்டிய தமிழக காவல்துறை

சொந்த நாடு திரும்ப சூடான் இளைஞருக்கு கருணை காட்டிய தமிழக காவல்துறை

Rasus

குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சூடான் மாணவருக்கு போலீசார் சொந்த நாடு திரும்ப கருணை காட்டிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.

சூடானை சேர்ந்தவர் முகமது அல் முஸ்தப்பா. இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்து நாகப்பட்டினத்திலுள்ள கல்லூரியில் படித்து வந்தார். அதேசமயம் கடந்த 2016-ஆம் ஆண்டு அரியர் இருந்ததாலும், சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாததாலும் தமிழகத்தில் தவித்துள்ளார். இதனையடுத்து சென்னைக்கு வந்து படிப்பை தொடர முயன்ற முஸ்தப்பா, கிடைத்த வேலைகளை செய்து வந்துள்ளார். தங்குவதற்கு இடமில்லாததால், மெரினாவிலும் அடிக்கடி தங்கி வந்துள்ளார்.

இதனிடையே மெரினாவிலுள்ள சில இளைஞர்களுடன் முஸ்தப்பாவிற்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சில இளைஞர்களை கத்தியால் தாக்கியுள்ளார் முஸ்தப்பா. இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்தப்பாவிற்கு 4 மாத சிறைத் தண்டனையும் வழங்கப்பட்து. இதனையடுத்து விடுதலையான முஸ்தப்பாவிற்கு சொந்த நாடு திரும்ப போதிய அளவில் பணமில்லை. இதனால் மீண்டும் திணறிய முஸ்தப்பாவை சொந்த நாட்டுக்கு அனுப்ப காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தினார்.

அதன்பேரில் காவல்துறையினர் டெல்லியிலுள்ள சூடான் தூதகரத்தை தொடர்பு கொண்டு முஸ்தப்பா சொந்த நாடு செல்ல தேவையான நடவடிக்கைகளை செய்தனர். அத்துடன், 60,000 ரூபாய்க்கு விமான டிக்கெட் எடுத்து கொடுக்கப்பட்டு முஸ்தப்பா சொந்த நாடு திரும்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. காவல்துறையினருக்கு முஸ்தப்பா தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.