மேகதாதுவில் அணைக் கட்டும் பேச்சுக்கே இடமில்லை என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணைக் கட்ட கர்நாடகா அரசு நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. ஆனால் அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனிடையே எடியூரப்பா கர்நாடகாவின் முதலமைச்சராக பதவியேற்றபின், பிரதமரை நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அதில், மேகதாதுவில் அணைக் கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவை என எந்தச் சட்டமோ, விதியோ இல்லை எனவும் மேகதாது அணை கட்டப்படவுள்ள இடம் கர்நாடகா எல்லைக்குள் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், கர்நாடகா எல்லைக்குள் அணைக் கட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பிலும் தடை விதிக்கவில்லை என கூறியிருந்தது. ஆனால் காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுவதற்கு ஆய்வு நடத்த கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது.
இந்நிலையில், ஓராண்டுக்குப்பிறகு மத்திய நீர்வளத்துறை ஆணையர் சின்கா தலைமையில் காவிரி மேலாண்மை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஏற்படக்கூடிய தீமைகளை சுட்டிக்காட்டிய தமிழக அரசு, மேகதாதுவில் அணைக் கட்டும் பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.