67 quarries have been closed TVK Minister Prabhu
தமிழ்நாடு

20 நாளில் 67 குவாரிகள் மூடல்.. அதிரடி காட்டும் TVK அரசு! திமுக அரசு செய்தது என்ன?

தவெக அரசு ஆட்சிக்கு வந்த 20 நாளில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 67 தற்காலிக குவாரிகள் மூடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Praveen Joshva L

தமிழகத்தில் நீண்டநாள் குற்றச்சாட்டாக இருந்த உரிமமற்ற குவாரி கொள்ளையைக் கட்டுப்படுத்த தவெக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. திமுக ஆட்சியில் 100-க்கும் மேற்பட்ட குவாரிகள் மூடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், புதிய ஆட்சியில் இதுவரை 67 குவாரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் சட்டவிரோத கனிம எடுப்பு நடந்த 78 இடங்கள் கண்டறியப்பட்டு, 469 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக உரிமம் இல்லாத குவாரிகள் மூலம் முறைகேடாக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இதற்கு அவ்வப்போது மாநில அரசு நடவடிக்கை எடுப்பது வழக்கம்.

அந்த வகையில் கடந்த திமுக ஆட்சியில் 100-க்கும் மேற்பட்ட தனியார் கல்குவாரிகள் தற்காலிகமாகவும், சில நிரந்தரமாகவும் மூடப்பட்டதாக அப்போதைய அரசு தெரிவித்தது. அதே போல தற்போது தவெக ஆட்சியமைத்துள்ள நிலையில், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு பல்வேறு இடங்களில் குவாரிகளில் சோதனை நடத்தினார்.

இந்த சோதனையில் முதற்கட்டமாக விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. மேலும் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தற்போது வரை 67 குவாரிகள் மூடப்பட்டுள்ளதாகவும், உரிய அனுமதி இன்றி கனிம வளங்களை ஏற்றிச்சென்ற 469 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக கனிமங்கள் எடுக்கப்பட்ட 78 இடங்கள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.