தமிழ்நாடு

சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்; ஆனால், பழைய வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது

webteam

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத கால சிறை தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், இந்த உத்தரவு இன்று பிறப்பிதற்கு முன்பாக நேற்று இரவே முந்தையை குற்றச்சாட்டுகளில் சவுக்கு சங்கர் சிறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

யூட்யூபர் சவுக்கு சங்கர் நீதித்துறை குறித்து அவதூறு கருத்தை பரப்பியதாக அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த செப்டம்பர் 15ம் தேதி சவுக்கு சங்கருக்கு 6 மாத கால சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை அடுத்து அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார் பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு வழங்கிய ஆறு மாத கால சிறை தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இடைப்பட்ட காலத்தில் இந்த வழக்கு குறித்து எந்த கருத்தையும் அவர் தெரிவிக்க கூடாது எனவும் நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர். வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்காக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது, ’எங்களை விமர்சிக்காதீர்கள் என சொல்லவில்லை ஆனால் அதற்கு என ஒரு வரைமுறைஉள்ளது. எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல் எப்படி இத்தகைய குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் ’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

ஆனால், சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. அதாவது, ஏற்கனவே சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள 4 வழக்குகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். குறிப்பாக கடந்த 2020ஆம் ஆண்டு ஈ.பி.எஸ் மற்றும் ஓபிஎஸ் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்தை பதிவிட்டதற்காக இரண்டு வழக்குகளும், 2021ஆம் ஆண்டு பிரதமருடைய பயண விவரங்களை பொது வெளியில் வெளியிட்டதற்காக 2 வழக்குகளும், சவுக்கு சங்கர் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்குகளில் நேற்று சவுக்கு சங்கரை கைது செய்து உள்ளனர். இந்த கைது தொடர்பான ஆவணங்களை சிறைத்துறை அதிகாரிகளிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கொடுத்துள்ளனர். அடுத்தகட்டமாக நாளை இந்த வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முறையாக கைது செய்து நீதிமன்ற காவலில் அடைக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.