நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தல்களையே நடத்திடும்போது, தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாதா என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கோரி ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில், செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட, கடந்த ஜூன் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து புதிய மனு ஒன்றை தாக்கல் செய்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 7 மாத அவகாசம் கோரியது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில் ஒரு நாள் கூட அவகாசம் வழங்க முடியாது என்று தலைமை நீதிபதி மறுத்தார். உங்களுக்கு மட்டும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றுவது எப்போதும் கடினமாகவே இருக்கிறதா என்று மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம் கடிந்து கொண்டார். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களையே நடத்திடும்போது, உள்ளாட்சித் தேர்தலை நடத்த அவகாசம் கேட்கிறீர்களே என்று கடும் அதிருப்தியை தலைமை நீதிபதி வெளிப்படுத்தினார்.
அதற்கு, கொரோனா பரவல் காரணமாக பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்பதால்தான் கால அவகாசம் கேட்பதாகவும், நான்கு மாதங்கள் அவகாசம் வழங்கினால் கூட போதும் என்றும் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த என்னென்ன திட்டங்கள் என்பன உள்ளிட்ட விவரங்களை புதிய பிரமாணப் பத்திரமாக 2 தினங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட தலைமை நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.