தமிழ்நாடு

கர்நாடகாவின் ஜெயலலிதா வழக்கு : மறுசீராய்வு மனு தள்ளுபடி

கர்நாடகாவின் ஜெயலலிதா வழக்கு : மறுசீராய்வு மனு தள்ளுபடி

webteam

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட நூறு கோடி ரூபாய் அபராத தொகையை எப்படி வசூலிப்பது என்று விளக்கம் கேட்ட கர்நாடக அரசின் மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை, 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உறுதி செய்த உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. மேலும் ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவரை வழக்கில் இருந்து விடுவித்தது. இந்நிலையில், தண்டனையில் இருந்தே ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதாகவும், அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராத தொகையை வசூலிக்க உத்தரவிட கோரியும் கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் அதனை நிராகரித்தது. இந்தச் சூழலில், ஜெயலலிதா வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைத்திருந்தபோதுதான் அவர் உயிரிழந்தார் என்பதால், அவரை வழக்கில் இருந்து விடுவித்தது தவறு என்றும், அவரை குற்றவாளி என அறிவித்து அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை வசூலிக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கர்நாடகா மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.