கோவையில் நீச்சல் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவனும், அம்மாணவனைக் காப்பாற்ற சென்ற காவலாளியும் உயிரிழந்த சோக நிகழ்வு அரங்கேறியுள்ளது.
கோவை மருதமலை அடிவாரத்தில் தனியாருக்கு சொந்தமான நீச்சல் குளம் ஒன்று உள்ளது. இங்கு தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் ஐந்து மாணவர்கள் ஒன்றுகூடி குளிக்க சென்றுள்ளனர். தனியார் நீச்சல் குளத்தில் டிக்கெட் எடுத்து குளித்து கொண்டிருக்கும் போது, 7 அடி ஆழமான பகுதியில் அன்புச்செல்வன் என்ற மாணவன் நீரில் மூழ்கி தத்தளித்து உள்ளார். இதனால் உடனிருந்த மாணவர்கள் அதிச்சியடைந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் பதட்டத்தில் மாணவனைக் காப்பாற்றும்படி சத்தம் எழுப்பி உள்ளனர்.
மாணவர்கள் அலுறும் சத்தம் கேட்டு, அங்கே காவல் பணியிலிருந்த தேவராஜ்(60) என்பவர் மாணவனை மீட்க தண்ணீரில் குதித்துள்ளார். இதில் இருவரும் நீச்சல் குளம் ஆழமாக இருந்ததால் காப்பாற்ற முடியாமல் இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனையடுத்து உடனடியாக வடவள்ளி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டனர்.
இதனைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இருவரின் உடலையும் அனுப்பி வைத்தனர். முறையாக நீச்சல் பயிற்சியாளர்கள் இல்லாததும், முதலுதவிக்கு எந்த உபகரணமும் இல்லை என்றும் அந்தத் தனியார் நீச்சல் குளம் மீது புகார் எழுந்துள்ளது. இதனால் வடவள்ளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.