ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அருகே பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றதால் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது.
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில் மொத்தமாக 95.2 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 97 சதவித மாணவியர்களும், 93.3 சதவித மாணவர்களும் அடங்குவர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் நல்லகுமார் என்பவரின் மகன் அபிராம் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அபிராம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வுகள் முடிவுகள் நேற்று வெளியானதில் அபிராம் 332 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் தான் குறைவான மதிப்பெண்கள் பெற்றதாக தனது உறவினர்களிடம் கூறி அபிராம் வருத்தப்பட்டுள்ளார். இந்த சூழலில் அபிராம் வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த அபிராமின் சடலத்தை கைபற்றி ஈரோடு அரசு தலைமை மருத்துவமணைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறைவான மதிப்பெண்கள் பெற்றதாக கூறி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.