தமிழ்நாடு

3வது அலை வந்தாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்காது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

EllusamyKarthik

75 % மாநில அரசுக்கும், 25 % தனியாருக்கும் என்ற விதியை மத்திய அரசு 100 கோடி செலுத்தியதற்கு முன்பே சொல்லியிருந்தால் தமிழக அரசு கஜானா காலியாகி இருக்காது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி தேவைப்பாடுகள் குறித்த மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை கலையரங்கத்தில் நடைபெற்றது. 

தனியார் மருத்துவமனை பிரதிநிதிகள் இந்த மண்டல கூட்டத்தில் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் உணவு வழங்கல் துறை சக்கரபாணி, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோரும் பங்கேற்றனர். 

அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அலைகள் ஓய்வதில்லை என்பது போல 2வது அலை ஓய்ந்து கொண்டிருக்கும் போது மருத்துவ வல்லுனர்கள் 3வது அலை வரும் என சொல்லுகின்றனர். இங்கிலாந்து நாட்டை 3வது அலை உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், நாள்தோறும் 30,000 தாண்டி பாதிப்பு இருந்த போதும், இறப்பு எண்ணிக்கை தற்போது 20-25 என்கிற அளவில் பதிவாகியுள்ளதற்கு அந்நாட்டு மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதே காரணம். 

சுகாதார துறை சிறப்பாக செயல்பட்டதால் தமிழ்நாட்டிற்கு 5 லட்சம் கூடுதல் தடுப்பூசி வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மூன்றாவது அலை வந்தாலும்  தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்காது. 75 % மாநில அரசுக்கும், 25 % தனியாருக்கும் என்ற விதியை மத்திய அரசு 100 கோடி செலுத்தியதற்கு முன்பே சொல்லியிருந்தால் தமிழக அரசு கஜானா காலியாகி இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்