தமிழ்நாடு அரசுப்பணியில் வெளி மாநிலத்தவர்களுக்கு இடமளிக்கக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள் அறிக்கையில், கடந்த செப்டெம்பரில் நடைபெற்ற தமிழக பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களில் வெளி மாநிலத்தவர்கள் ஏராளமானோர் தேர்வாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழிலும் தேர்வெழுதும் நடைமுறை உள்ள தமிழகத்தில் தமிழே தெரியாத வெளி மாநிலத்தவர்கள், எப்படி பணியாற்ற முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநில அரசுப் பணிகளை வேறு மாநிலத்தவர்களுக்கு எந்த அரசும் விட்டுக்கொடுப்பதில்லை என்று கூறியுள்ள வேல்முருகன், வஞ்சகமான முறையில் வெளிமாநிலத்தவர் அபகரித்த விரிவுரையாளர் பணி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 100 சதவிகித பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிகளையும் தமிழக மக்களுக்கே வழங்க சட்டத்தின் மூலம் அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.