தமிழ்நாடு

இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்படை.. நடுக்கடலில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்

webteam

இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்து அகதிகளை இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி நாள்தோறும் அண்டை நாடுகளான இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் அகதிகளாக இடம்பெயர்ந்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

இந்த நிலையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே 13 மணல் தீடைகள் உள்ளன. அதில் 5 இந்தியாவுக்கும், 7 இலங்கைக்கு சொந்தமானது. இதில் ஒரு மணல் தீடை இரண்டு நாட்டிற்கும் பொதுவானதாக இருந்து வருகிறது

இதையடுத்து இலங்கையில் ஆறு நபர்கள் இந்தியாவுக்குச் சொந்தமான நான்காம் மணல் தீடையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்திய கடலோர காவல் படையினருக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர் அங்கு செல்ல தாமதமானதை அடுத்து இலங்கை கடற்படையினர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் வந்து நான்காம் மணல் தீடையில் இருந்த அகதிகளை கைது செய்து இலங்கை நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அந்நிய நாட்டு கப்பல் இந்திய எல்லைக்குள் வந்து அகதிகளை அழைத்துச் சென்றது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து தனுஷ்கோடி பகுதியில் இந்திய கடலோர காவல்படை அலுவலகத்தை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.