தமிழ்நாடு

அம்மாவ மீட்டுத் தாங்க... வேலைக்கு வராத தாயை கடத்திச் சென்றதாக மகன் புகார்

webteam

தருமபுரி அருகே செங்கல் சூளையில் பணிபுரிந்த பெண்ணை வாங்கிய கடனை திருப்பி கொடுக்கவில்லை எனக் கூறி காரில் கடத்திச் சென்றதாக சூளை அதிபர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மகன் புகார் அளித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியை அடுத்த ராமண்ணன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி லட்சுமி (50) மற்றும் அவரது மகன் முத்து (35) ஆகிய இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலமரம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணன் என்பவரது செங்கல் சூளையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளனர்.

அப்போது லட்சுமி, வேலை செய்து கழிப்பதாகக் கூறி கடந்த 1 வருடத்திற்கு முன்பு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை அட்வான்ஸ் தொகையாக பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து தாயும் மகனும் பணிபுரிந்து மாதா மாதம் சிறுக சிறுக பணத்தை கழித்து வந்துள்ளனர். இந்நிலையில் பொங்கல் திருவிழாவிற்கு தாயும் மகனும் தங்களது சொந்த ஊரான ராமண்ணன் கொட்டாய் கிராமத்திற்கு வந்துள்ளனர்.

இதையடுத்து பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு லட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் இருவரும் செங்கல் சூளை வேலைக்குச் செல்லவில்லை. இதனால், செங்கல் சூளை உரிமையாளர் கிருஷ்ணன், ஏன் வேலைக்கு வரவில்லை என தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்பொழுது தனது தாயிற்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது. சீரானதும் வருவதாக முத்து கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை செங்கல் சூளை உரிமையாளர் கிருஷ்ணன் அடி ஆட்களுடன் ராமண்ணா கொட்டாய் கிராமத்தில் உள்ள லட்சுமியின் வீட்டிற்கு வந்து பேசியுள்ளார். அப்போது உடனே வேலைக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தியதோடு, வராவிட்டால் கூடுதலாக ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதனால் லட்சுமிக்கும் கிருஷ்ணனுக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கிருஷ்ணன் மற்றும் அவருடன் வந்த அடியாட்கள் லட்சுமியை அடித்து வழுக்கட்டாயமாக அவர்கள் வந்த வாகனத்தில் கடத்திச் சென்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த முத்து, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது தாயை மீட்டு தரவும், கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளார்.

இந்த கடத்தல் சம்பவத்தை அப்பகுதியில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு எற்பட்டுள்ளது.