ஏமாற்றிய சீட்டுப்பணத்தை மீட்டு தரக்கோரி ராணுவ வீரர் எஸ்.பி.அலுவலகத்தில் ராணுவ உடையணிந்தவாறு புகார் அளித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை திருத்தணி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சரத்குமார்(29). ராணுவ வீரரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த குரு என்பவரிடம் கடந்த 2016ம் ஆண்டு முதல் 7,80,000 ரூபாய் ஏலச்சீட்டு கட்டி வந்ததாக தெரிகிறது. ஏலச்சீட்டு நிறைவடைந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் சீட்டு பணத்தை வழங்காமல் குரு அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை கேட்டும் சரியான பதில் கிடைக்காததால், தன்னுடைய சீட்டு பணத்தை பெற்றுத் தரக் கோரி ராணுவ உடை அணிந்தவாறு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரத்குமார் புகார் மனு அளித்துள்ளார். ஏமாந்த சீட்டு பணத்தை மீட்டுத்தர ராணுவவீரர், ராணுவ உடை அணிந்துவந்து கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.