shortage of Aavin milk chennai aavin
தமிழ்நாடு

சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு.. கொதிக்கும் பொதுமக்கள்.. அரசின் விளக்கம் என்ன?

சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தாங்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Praveen Joshva L

தமிழ்நாடு அரசின் நிறுவனமான ஆவின் நிறுவனமே தமிழ்நாட்டின் நகர்ப்புற பால் தேவையின் பெரும்பங்கைத் தீர்த்து வைக்கிறது. அதிலும் குறிப்பாக, சென்னையில் பால் விநியோகம் ஆவின் நிறுவனத்தை நம்பியே உள்ளது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக ஆவினின் பச்சை நிற‌ பாக்கெட் பால் கிடைப்பதில்லை எனவும் பொதுமக்கள் குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர்.

வழக்கமாக அதிகாலை நேரத்தில் கிடைக்கும் ஆவின் பால் பாக்கெட்கள், பல பகுதிகளில் தாமதமாக வருவதால் நுகர்வோர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அப்படி தாமதமாக வந்தாலும் சில இடங்களில் தேவையான அளவுக்குப் பால் கிடைக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதேபோல, சில ஆவின் விற்பனை மையங்களில் காலை நேரத்திலேயே பால் பாக்கெட்டுகள் தீர்ந்து விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதனால் தினமும் ஆவின் பாலை நம்பியிருக்கும் குடும்பங்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் தேநீர்க் கடை உரிமையாளர்கள் தனியார் நிறுவனங்களின் பாலை அதிக விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனினும், பொதுமக்களின் இந்தக் குற்றச்சாட்டை ஆவின் நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்துப் பேசிய ஆவின் நிர்வாகிகள், சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் எந்தத் தட்டுப்பாடும் இல்லை என்றும், வழக்கம்போல விநியோகம் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது.