தமிழ்நாடு

முக்கொம்பு மேலணையில் 7 மதகுகள் அடித்துச் செல்லப்பட்டன

rajakannan

கேரளா மற்றும் கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து வினாடிக்கு 2 லட்சத்திற்கு அதிமாக தண்ணீர் சமீபத்தில் வெளியேற்றப்பட்டது. இதனால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து, முழுக்கொள்ளவை எட்டியது. அதிக அளவிலான நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்படுவதால் காவிரி கரையோர மக்களுக்கு அவ்வவ்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்நிலையில், அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், திருச்சியை அடுத்த முக்கொம்பு மேலணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலணையில் மொத்தமுள்ள 45 மதகுகளில் 7 மதகுகள் அடித்துச் செல்லப்பட்டன. 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மதகுகள் உடைந்து தண்ணீர் வெளியேறி வருவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

7 மதகுகள் உடைந்ததை தொடர்ந்து அணையில் இருந்து 90,000 கன அடி நீர் வெளியேறி வருகிறது. 1836 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முக்கொம்பு மேலணை கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.