தமிழ்நாடு

தங்கமங்கை கோமதியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் 'பாப்பாத்தி அக்கா'!

webteam

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு பலர் உந்துதலாக இருந்த போதிலும் பிரான்சிஸ் மேரி என்பவர் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளார். 

'எல்லாவற்றுக்கும் நீங்கள்தான் அக்கா காரணம்’ என்று அழுதுகொண்டே தொலைபேசியில் பேசிய கோமதியிடம் மறுமுனையில், 'உனது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது' என்று உணர்ச்சிப்பூர்வமாகப்  பேசியவர்  பிரான்சிஸ் மேரி. இவர் மயிலாப்பூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கோமதி வெற்றி பெற்றவுடன் 'பாப்பாத்தி அக்காவுக்கு நன்றி' என்று சொன்னாரே அவர்தான் இந்த பிரான்சிஸ் மேரி.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த இவர், 2009 ஆம் ஆண்டு தான் கோமதிக்கு அறிமுகமானார். கோமதி கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போதுதான் தடகளத்தில் சக போட்டியாளராக மேரி பங்கேற்றார். மைதானத்தில் இவர்கள் போட்டியாளர்கள், வெளியில் உற்ற தோழிகள்.

கோமதி சோர்வடையும்போதெல்லாம் அவரை மனம் தளரவிடமால் ஊக்குவித்தது மேரி‌தான். ஆனால் மேரிக்கோ கடும் பொருளாதாரச் சிக்கல். அதையும் மீறி விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை மட்டும் குறையவில்லை. சூழ்நிலை ‌அவரின் கனவுகளைப் புரட்டிப்போட்டது. சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு விபத்து மேரியின் கனவை சிதைத்தது.

அதே போன்றதொரு விபத்தால் கோமதியின் கனவும் தன் கண்ணெதிரே தடைபட்டதை பார்த்தார் மேரி. கோமதியின் தந்தையும், பயிற்சியாளரும் உயிரிழந்த‌ பின்னர் அவர்களை விடவும் சிறப்பான முறையில் கோமதியை அரவணைத்தார். பிரான்சிஸ் மேரியின் மந்திரச் சொற்களே தனது வெற்றி இலக்கை எட்ட வைத்துள்ளது என்கிறார் கோமதி.

பக்கபலமாக இருக்கும் பிரான்சிஸ் மேரிதான் கோமதிக்கு இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை. 'பாப்பாத்தி அக்கா' என்ற பிரான்சிஸ் மேரி, கோமதியின் இனி பெறப் போகும் வெற்றிகளுக்கும் சேர்ந்தே ஓட இருக்கிறார்.