பள்ளிக்கு சென்ற மாணவி உயிரிழந்தாகவும்,மாணவியின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், இதனால் பள்ளி நிர்வாகத்தை விசாரணை செய்ய கோரி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்து உள்ளனர்.
கோவை ஆவரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ராதேவி-காளீஸ்வரன். இந்த தம்பதிக்கு இரு மகள்கள், பவித்ரா மற்றும் திவ்யா. குடும்ப பிரச்னை காரணமாக சித்ராதேவி தன் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனது மூத்த மகளான பவித்ரா அருகில் உள்ள சாரதாமணி தேவி பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பள்ளி நிர்வாகம் சித்ராதேவியை தொடர்பு கொண்டு பவித்ராவிற்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைதொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட பவித்ராவை காண தாய் சித்ராதேவி சென்றபோது, குழந்தைகள் வார்டில் பவித்ரா இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் பள்ளி நிர்வாகத்திடம் தாய் சித்ராதேவி மகள் பவித்ராவுக்கு என்ன நடந்தது என கேட்டபோது பள்ளி நிர்வாகத்தினர் முறையான பதில் அளிக்காமல், குழந்தையை உடற்கூறு ஆய்வு செய்து பெற்றுக் கொள்ளுமாறு மிரட்டுவதாகவும் தாய் சித்ராதேவி கூறினார்.
இதனையெடுத்து, தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தியும் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்து உள்ளார்.