குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்ட மாமன்னர் ராஜராஜன் மற்றும் உலகமாதேவி சிலைகள் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
தஞ்சை பெரிய கோயிலில் இருந்து 60 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்து அரசி உலகமாதேவி ஆகியோரின் சிலைகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து மீட்கப்பட்டன. ரயில் மூலம் சென்னை கொண்டு வரப்பட்ட சிலைகள் கும்பகோணம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. மன்னர் மற்றும் அரசி சிலைக்கு கும்பகோணத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விரைவில் சிலைகள் தஞ்சை பெரிய கோயிலில் வைக்கப்பட உள்ளன. முன்னதாக கும்பகோணம் செல்லும் வழியில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ராஜராஜன் சிலைக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பழங்காலத்தில் மன்னர்கள் நின்று தரிசனம் செய்யும் பஞ்சப்படி என்ற இடத்தில் ராஜராஜன் மற்றும் உலகமாதேவியின் சிலைகள் வைக்கப்பட்டன. அப்போது சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், ஐஜி பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட காவல்துறையினரும் பொதுமக்களும் பங்கேற்றனர்.