தமிழ்நாடு

கபாலீஸ்வரர் கோயிலில் சிலைகள் மாற்றம் : திருமகளுக்கு சிக்கல்? 

webteam

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பழமையான சிலைகள் மாற்றப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது‌. அதனால், அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் இருந்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான புன்னைவனநாதர், ராகு மற்றும் கேது சிலைகளை அகற்றி விட்டு, கடந்த 2004-ஆம் ஆண்டு அதற்கு பதில் புதிய சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் சிலைகள் மாயமானபோது கபாலீஸ்வரர் கோயில் செயல் அலுவலராக இருந்த திருமகளுக்கு தொடர்பிருப்பதாக காவல்துறை சந்தேகித்து கைது செய்தது. இதனையடுத்து திருமகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், தான் பணியில் இருந்த 2002 - 2007 ஆம் ஆண்டு காலகட்டத்தில், எந்த சிலையும் மாற்றப்படவில்லை என கூறியிருந்தார். 

இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ளது. அதில் 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில், புதிய சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் கபாலீஸ்வரர் கோயிலில் பழமையான சிலைகள் மாற்றப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த சிலையும் மாற்றப்படவில்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்த திருமகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.