தமிழ்நாடு

தெற்கு சூடானில் கடத்தப்பட்ட தமிழர்கள் விடுவிப்பு

webteam

தெற்குச் சூடானில் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த 2 தமிழர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த மிதுன் கணேஷ் (25), குமரி மாவட்டம் திங்கள்சந்தையை சேர்ந்த எட்வர்ட் (40) ஆகியோர் தெற்குச் சூடானில் பெட்ரோலிய நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தனர். அவர்களை இந்த மாதம் 8-ம் தேதி அந்நாட்டில் உள்ள கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர். அதே போல பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரையும் சூடான் நாட்டை சேர்ந்த மூன்று பேரையும் கடத்திச் சென்றனர். இவர்களில் சூடான் நாட்டை சேர்ந்தவர்கள் 3 பேரை, அவர்கள் சுட்டுக் கொன்றதால் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் மிதுன் மற்றும் எட்வர்ட் ஆகிய 2 தமிழர்களையும் கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளனர். சூடானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இத்தகவலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.