திருக்குறளின் அருமையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் பள்ளி, கோயில், விசேஷ வீடுகள் என அனைத்து பகுதிகளிலும் திருவள்ளுவர் சிலைகளை நிறுவி, வீட்டிலும் பெரிய சிலையை வைத்து வழிபட்டு வருகிறார் கோவையை சேர்ந்த நபர். திசை எட்டும் திருக்குறள் பரவ வேண்டும் என்பதே இவரின் இலக்காகவும் வைத்து திருக்குறள் தொண்டராக வாழ்ந்து வருகிறார்.
கோவையை அடுத்த கணபதி பகுதியை சேர்ந்த நித்யானந்த பாரதி வீட்டை சுற்றி எங்கு திரும்பினாலும் திருவள்ளுவர் சிலையாகவே உள்ளது. இவர் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், எழுதுதல், குறள் தொடர்பான ஓவியம், கதை, கவிதைப் போட்டிகள் நடத்தி, ஒவ்வோர் ஆண்டும் பரிசு வழங்கி வருகிறார். குறிப்பாக அனைவரும் திருவள்ளுவரை போற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு பகுதிகளுக்கு தாமாகவே சிலை செய்து வைத்து வருகிறார்.
தற்போது வரை 13 பள்ளிகளில், 4 அடி உயர திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளார். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் இவர் மூலம் திருவள்ளுவர் குடி புகுந்திருக்கிறார். திருக்குறளைப் பரப்புவோருக்கு ஆண்டுதோறும் 'திருக்குறள் தொண்டர், திருக்குறள் தூதர்' உள்ளிட்ட விருதுகளை வழங்கி வருகிறார்.
மேலும் பல்வேறு நாடுகளுக்கும் திருவள்ளுவரின் சிலைகளை ஏற்றுமதி செய்து வருகிறார். குறிப்பாக இலவசமாக வழங்கினால் அதன் மதிப்பை உணரமாட்டார்கள் என்பதால், தான் உற்பத்தி செய்யும் விலைக்கே இந்தச் சிலைகளை அவர் வழங்கி வருகிறார்.
இதனால் பலருடைய வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறுகிறார்.