சென்னையில் ரிப்பன் மாளிகையின் முன்பு துய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ’மாநகராட்சியில் குடியேறும் போராட்டம்’ எனவும் பெயர் வைத்துள்ளனர்.
10 நாட்களை கடந்திருக்கும் இப்போராட்டம், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ராயபுரம் மற்றும் திரு.வி.க நகர் போன்ற பகுதிகளின் தூய்மை பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டபோது தொடங்கியது. அதுமட்டுமில்லாமல் தண்டையார்பேட்டை, அண்ணா நகர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில்தான், தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 11வது நாளாக பணியாளர்கள் போராடிவரும் சூழலில், தவெக தலைவர் விஜய் இன்று தூய்மை பணியாளர்களை நேரில் அழைத்து சந்தித்து பேசினார்.
11 வது நாளாக போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை நேரில் அழைத்து சந்தித்த தவெக தலைவர் விஜய், 1 மணி நேரத்திற்கும் மேலாக கலந்துபேசினார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் கு.பாரதி, ”கடும் வெயில், மழையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நேற்றிரவு நேரடியாக வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். அவர் வருவதன் காரணமாக போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு போராட்டம் சிக்கலுக்குள்ளாக கூடாது என்பதன் அடிப்படையில் அவரை சந்திக்க வந்தோம். தவெக தலைவர் விஜய் மட்டுமல்லாது அனைத்து கட்சித் தலைவர்களையும் நேரடியாக சந்தித்துள்ளோம்..
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் வெற்றிப் பெறுவதற்கு தமிழக வெற்றிக் கழகம் பக்கபலமாக துணை நிற்பதாக விஜய் கூறியுள்ளார். சட்ட உள்ளிட்ட தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக நின்று செயல்படும் என விஜய் கூறினார். அதற்காக எங்கள் இயக்கம் சார்பில் அவருக்கு நன்றி கூறிக் கொள்கிறோம்.
தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளதாகவும் கடினமான சூழலில் தூய்மை பணியாளர்களை சந்திப்பதாகவும் விஜய் கூறினார். இதுகுறித்து சிந்தித்து வருவதாகவும், ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளதாக வெளிப்படுத்தினார். தூய்மை பணியாளர்கள் உடன் இயல்பாக உரையாடியதோடு, கோரிக்கைகளையும் விஜய் கேட்டறிந்தார். தொடர்ந்து போராட்டத்திற்கு உடன் இருப்பதாகவும் கூறினார்.
7 கட்ட பேச்சுவார்த்தையில் தனியாருக்கு வேலைக்கு செல்ல வேண்டும், இடத்தை காலி செய்ய வேண்டும் என்கிற அரசின் பேச்சுவார்த்தை குறித்தான சாராம்சங்களை கேட்டறிந்தோம். மனிதர்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் போதுதான் ஒரு இல்லத்தில் சென்று சாப்பிட்டேன் என்பதனை பெருமையாக கூறுவர். கழிப்பறை திறந்து வைப்பதையெல்லாம பெருமையாக கூறுகின்றனர். ராம்கி நிறுவனத்தில் 2000 தொழிலாளர்களை அடமானம் வைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணமாக உள்ளது என்பது குறித்து விஜய்யிடம் கூறினோம்” என தெரிவித்துள்ளார்.
மேலும், போராட்டத்தை உடைக்க குறுக்கு வழியில் அரசு செயல்படுகிறது. சங்கம் பிளாக்மெயில் செய்வதாக அரசுத் தரப்பு வாதமாக முன்வைக்கிறது. அரசின் வழக்கறிஞர் ராம்கி தனியார் நிறுவன வழக்கறிஞராக செயல்படுகிறார். எவ்வித அடிபடையின்றி சங்கத்தை விமர்சிக்கிறார்.
சம்பள குறைப்பு, உழைப்பு சுரண்டல், கார்ப்பரேட்டுக்கு சாதமாக செயல்பட வேண்டும் என அரசு நினைக்கிறது. ராம்கி நிறுவனத்தின் மீது அதன் உரிமையாளர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
முதலமைச்சர் ஸ்டாலின் மேயராக இருந்தவர். முதலமைச்சரும், அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கடந்த காலங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக இருந்தனர். அவர்களின் பணிநீக்கத்தை கண்டித்து கேள்வி எழுப்பி உள்ளனர். தேர்தல் வாக்குறுதியையும் முதலமைச்சர்தான் அளித்தார். அதனைத்தான் நாங்கள் திருப்பி கேட்கிறோம். கடந்த கால ஆட்சியை செய்வதையே நீங்களும் செய்வதற்கு நீங்கள் எதற்கு? அமைச்சர் சேகர்பாபு தேர்தல் வாக்குறுதி அளிக்கப்படவில்லை என்று கூறுவதன் மூலம் திமுகவுக்கு எதிராகவே அவர் செயல்படுகிறார்” எனத் தெரிவித்தார்.