தமிழ்நாடு

மீண்டும் போராட்டம் நடத்தப்படும்- TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அறிவிப்பு!

webteam

சென்னையில் போராட்டம் நடத்திய போது காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கலைத்ததால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணி நியமனம் வழங்கக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கலைத்தனர். அப்போது எங்களின் கோரியை ஏற்காவிட்டால் மாவட்டம்தோறும் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.



2018ம் ஆண்டு கொண்டு வந்த அரசாணையின் படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தாலும் மீண்டும் போட்டி தேர்வு வைத்து ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அரசாணை வெளியானது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இந்த அரசாணை ரத்து செய்யப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் போட்டி தேர்வு நடத்தப்படும் என திமுக அரசு தெரிவித்துள்ளதால் போராட்டம் நடைபெற்றது.

‘’ தேர்வில் தேர்ச்சி பெற்ற 30,000 ஆசிரியர்கள் இருக்கிறோம். எங்களுக்குப் பின்னால் இருக்கும் குடும்பங்களை நினைத்துப்பாருங்கள். போராட்டம் நடத்தினால் எங்களை மனதளவில் பயமுறுத்தியும், உடல் அளவில் துன்புறுத்தியும் வெளியேற்றப் பார்க்கிறார்கள். எங்களுக்குப் பணி நியமனம் வழங்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தத் தயாராக உள்ளோம்” என ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்த கூட்டமை சேர்ந்த புகழேந்தி கூறினார்.