சேலத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்தை தொடர்ந்து இயக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடந்தாலும், முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்தில் 85 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போல, பேருந்தை தொடர்ந்து இயக்கத் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மேற்கு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரையொட்டி வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்து பிடிபட்டது. அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட பேருந்து சேலத்திலிருந்து திருப்பத்தூர் வழியாக வேலூர் வரை இயக்கப்படுவதும், இதில் திருப்பத்தூர் வரை செல்ல சாதாரண கட்டணம் ரூ 50 க்கு பதிலாக, 100 ரூபாயும் வேலூர் வரை செல்வதற்கு 123 ரூபாய்க்கு பதிலாக 200 ரூபாய் வசூலித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பேருந்து இயக்கத்திற்கு தற்காலிக தடை விதித்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.