தமிழ்நாடு

கர்ப்பிணிப் பெண்ணிடம் வருத்தம் தெரிவித்த கோட்டாட்சியர்

கர்ப்பிணிப் பெண்ணிடம் வருத்தம் தெரிவித்த கோட்டாட்சியர்

webteam

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை விருதுநகர் மாவட்ட கோட்டாட்சியர் காளிமுத்து நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஒருவர் வெளிநாடு செல்வதற்காக உடல் பரிசோதனை செய்தபோது ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில் 2 வாரங்களுக்கு முன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர் ரத்த தானம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது ரத்தம் யாருக்கு செலுத்தப்பட்டது என்ற பட்டியலை எடுத்து பார்த்தபோது, சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபோது அவர் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து எச்ஐவி ரத்தம் ஏற்றிய அந்த மருத்துவமனை தொழில்நுட்ப வல்லுநரான ஒப்பந்த ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் அந்த கர்ப்பிணிப் பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் விருதுநகர் மாவட்ட கோட்டாட்சியர் காளிமுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். நடந்த தவறுக்காக அவர் வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி சென்றுள்ள ஆட்சிய‌ர் சிவஞானம் திரும்பி வந்து தங்களை சந்திப்பார் என்று அந்தப்பெண்ணிடம் காளிமுத்து தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் கோரிக்கை எது‌வாக இருந்தாலும் அது நிறைவேற்றப்படும் என காளிமுத்து உறுதியளித்துள்ளார். அப்போது சமூகத்திலிருந்து எங்களை ஒதுக்கிவீடாதீர்கள் என பாதிக்கப்பட்ட தம்பதி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

இந்த சுழலில் எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண்ணை நேரில் சந்திக்க தற்போது சுகாதார துறை செயளாலர் ராதாகிருஷ்ணன் சாத்தூர் செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தனது இந்த நிலைமைக்கு காரணமாக சாத்தூர் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.