தமிழ்நாடு

ரூ.1000 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு இன்று விநியோகம்

ரூ.1000 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு இன்று விநியோகம்

webteam

தமிழகம் முழுவதிலும் உள்ள நியாய விலைக்கடைகளில் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்திலுள்ள இரண்டு கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதில் பொங்கலை சிற‌ப்பாகக் கொண்டாடும் வகையில் ஒருகிலோ பச்சரிசி, ஒரு‌ கிலோ சர்க்கரை, இரண்டு அடி‌ நீளக் கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் அதனுடன் ஆயிரம் ரூபாய் பணமும் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார். 

இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள நியாய விலைக்கடைகளில் இன்று முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்புக்காக 258 கோடி ரூபாயும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசுக்காக சுமார் 1980 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் சிறப்பு பரிசை ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தியும் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். மேலும் சிறப்பு பொங்கல் பரிசினை அனைவருக்கும் பொங்கல் பண்டிகைக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.