காவலர் இளைஞரைக் தாக்கிய விவகாரம்
காவலர் இளைஞரைக் தாக்கிய விவகாரம் PT WEB
தமிழ்நாடு

தென்காசி: இளைஞரை காலால் உதைத்து காவலர் தாக்கும் வீடியோ வைரல் - நடந்தது குறித்து எஸ்.பி விளக்கம்!

விமல் ராஜ்

தென்காசி மாவட்டம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு இளைஞர் ஒருவரை பணியில் இருந்த காவலர் ஒருவர் காலால் உதைத்து சரமாரியாகத் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதற்க பல்வேறு தரப்பினரும் காவலரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாகத் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் புதிய தலைமுறைக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில்,"தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்சென்ட் என்ற இளைஞர் தன் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு மூன்று பேருடன் ஒரே பைக்கில் வந்தனர். மது அருந்திய அவர்கள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பெண்கள் மீது மோதுவது போன்ற சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த பகுதியில் வாகன சோதனையின் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய முயற்சி செய்துள்ளனர். காவலரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் காவலரையும், அவருடைய குடும்பத்தினரையும் அவதூறாகப் பேசி தாக்க முயற்சி செய்துள்ளார்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார்

மேலும் மூன்று பேரில் உடன் வந்த ஒருவரைப் பேருந்தில் மறைந்து நின்று வீடியோ எடுக்க வைத்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. தென்காசியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் மகன் என்பதும் இதற்கு முன்பு இது போன்று போலீசார் உடன் பல முறை தகராறு செய்ததும் தெரியவந்துள்ளது. டிஎஸ்பி தலைமையில் இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.