பெட்டிக்கடையில் சிகரெட் கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடைக்கு தீவைத்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை சிவானந்தா காலனி காந்திநகர் பகுதியில் வசிக்கும் செய்யது அலாஹி என்பவர் சிறியதாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த 8ஆம் தேதி இரவு, இவரது கடையில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் பலத்த தீக்காயமடைந்த செய்யது அலாஹி, தற்போது கோவை அரசு மருத்துவமனையில் தீக்காயம் பிரிவில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் நடந்த இரவு கடைக்கு வந்த இருவர், சிகரெட் கேட்டபோது தாமதமாக கொடுத்ததால் செய்யது அலாஹிக்கும், இருவருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், அந்த இருவரும் கடைக்கு தீவைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக புகார் எழுந்துள்ளதால், கடையில் தீ மாதிரிகளை பரிசோதனை அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த இரு நபர்களையும் இரத்தினபுரி காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட செய்யது அலாஹி குடும்பத்தாருக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தேடப்பட்டு வரும் விக்கி, வில்சன் என்ற இருவரும் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.