தமிழ்நாடு

கடன் பெற்று தருவதாக மோசடி - பணத்தை திருப்பி கேட்டவர்களை தாக்கிய அரசியல் பிரமுகர்

கடன் பெற்று தருவதாக மோசடி - பணத்தை திருப்பி கேட்டவர்களை தாக்கிய அரசியல் பிரமுகர்

webteam

பொள்ளாச்சியில் சிறு தொழில் தொடங்க வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக திமுக வார்டு செயலாளர் ஞானவேல் உள்ளிட்ட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

பொள்ளாச்சி நகரம் 35 வது வார்டு ஜோதி நகரை சேர்ந்தவர் திமுக கிளைச் செயலாளர் ஞானவேல். இவர் கடந்த ஆண்டு செய்தித்தாளில் சிறு தொழில் தொடங்க வங்கி கடன் ஏற்பாடு செய்து தரப்படும் என விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த பொள்ளாச்சி அருகே உள்ள காளியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் பாக்குமட்டை தட்டு தயாரிப்புக்கான இயந்திரத்தை வங்கிக் கடன் மூலம் பெற்றுத்தர அணுகியுள்ளார். 

அப்போது ஞானவேல் முன்பணமாக 50 ஆயிரம் ரூபாய் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் மூன்று மாதமாகியும் இயந்திரம் வாங்கி தராததால் ராமலிங்கம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஞானவேல் இழுக்கடித்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி சென்று பணத்தை கேட்டு வந்த ராமலிங்கம் கொஞ்சம் கொஞ்சமாக 45 ஆயிரம் வரை பணத்தை திருப்பி வழங்கியுள்ளார். 

இந்நிலையில், நேற்று ராமலிங்கம் அவரது அண்ணன் கனகராஜ் ஆகியோர் திமுக பிரமுகர் ஞான வேலை சந்தித்து மீதி பணத்தை கேட்டுள்ளனர். அப்போது  ஞானவேல் பணத்தை தர முடியாது என கூறி மிரட்டியதாக  கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து ஞானவேல் அவரது நண்பர்களை அழைத்து ராமலிங்கத்தையும் அவரது அண்ணன் கனகராஜையும் சராமரியாக தாக்கியுள்ளார். 

இதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு பொதுமக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் திமுக பிரமுகர் ஞானவேல் உள்ளிட்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஞானவேல் உட்பட 6 பேரும் தலைமறைவாகியுள்ளதால் அவர்களை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.