கத்தியுடன் சுற்றிய நபர் வேற்று கட்சிக்காரர் web
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி| கத்தியுடன் சுற்றியவர் மாற்றுக்கட்சிக்காரர்.. தவெக சார்பில் விளக்கம்!

கிருஷ்ணகிரியில் தவெக கட்சிக்கொடி அணிந்து கையில் கத்தியுடன் சுற்றிய நபர் வேற்று கட்சிக்காரர் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம்கள், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

அதன்படி கிருஷ்ணகிரி ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தின் கிருஷ்ணகிரி நகர செயலாளர் சசிகுமார் தலைமையில் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் நடத்தப்பட்டது.

என்ன நடந்தது?

இந்த நிலையில் மாலையில் கீழ்புதூர் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவர் நகர செயலாளர் சசிகுமார் தலைமையில், தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட இரண்டு கார்களில் வந்து பிறந்தநாள் கொண்டாட கீழ் புதூர் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியேற்றி மரக்கன்றுகள் நட முற்பட்டுள்ளனர்.

அந்த சமயத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த கிளை தலைவரான விஜய் என்கின்ற நாகராஜ் இது என்னுடைய ஏரியா இங்கு எனக்கு தகவல் தெரிவிக்காமல் எப்படி வந்து நிகழ்ச்சிகள் நடத்துகிறீர்கள், என் தலைமையில் நான் இரவு நிகழ்ச்சி நடத்திக் கொள்கிறேன் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

விஜய்

அப்பொழுது புதிய பாஞ்சாலியூர் பகுதியை சேர்ந்த தபு என்கின்ற தப்ரீஸ் கையில் கத்தியுடன் அவரது நண்பர்கள் பத்துக்கும் மேற்பட்டோருடன் அங்கு சென்று, நீங்கள் யாரடா எங்களை கேள்வி கேட்பதற்கு நாங்கள் அப்படித்தான் செய்வோம் எனக்கூறி விஜய் என்கின்ற நாகராஜ் தரப்பினரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

கையில் கத்தியுடன் சுற்றிய நபர்..

அப்பொழுது தபு என்கின்ற தப்ரீஷ் கத்தியை எடுத்து சுற்றி நின்றிருந்த விஜய் என்கின்ற நாகராஜ் தரப்பினர் மீது தாக்கியதில் அதே பகுதி சேர்ந்த பார்த்திபன், முருகேசன், சூர்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர் அவர்களை திருப்பி தாக்கியதில் அங்கு வந்த ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்த அருண், ஹரிராம், பாரதியார் நகர் பகுதியை சேர்ந்த சஞ்சய் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த 6 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் வருகின்றனர்.

கையில் கத்தியுடன் சுற்றிய தவெக கொடி அணிந்த நபர்

இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் வந்த காரை அங்கேயே விட்டுச் சென்றதால் அந்த பகுதி மக்கள் காரின் முன் பக்கம் மற்றும் பின் பக்க கண்ணாடிகளை உடைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தவெக கட்சியை சேர்ந்தவர் அல்ல..

தவெக தலைவர் விஜய் பிறந்தநாளில் நடந்த இச்சம்பவம் பேசுபொருளாக மாறிய நிலையில், தற்போது கத்தியுடன் சுற்றிய நபர் தவெக கட்சியை சேர்ந்தவர் இல்லை என ஈரோடு மாவட்ட தவெக செயலாளர் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கத்தியுடன் சுற்றியவர் மாற்றுக்கட்சிக்காரர்: தவெக

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி அருகே கையில் கத்தியுடன் சுற்றியவர் வேறு கட்சியை சேர்ந்த நபர், அவருக்கும் தவெக கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 15 நாட்களாக தவெக துண்டு அணிந்து கட்சிப் பெயரை தவறாக பயன்படுத்தி வந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.