என்.ஐ.ஏ. வழக்கில் கைதானவர் பூந்தமல்லி தனி கிளைச் சிறை வார்டனை மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்து பிரமுகர்கள் கொலை வழக்கு மற்றும் என்.ஐ.ஏ. வழக்குகள் உட்பட மேலும் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் உள்ள பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், என்.ஐ.ஏ. வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காஜாமைதீன் என்பவர், தன்னை மிரட்டியதாக பூந்தமல்லி சிறை வார்டன் முத்துராமன் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் இருக்கும் காஜாமைதீன் தனக்கு பிளாஸ்க், டம்ளர் உள்ளிட்ட பொருட்களை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாகவும் அதிகாரிகள் உத்தரவு இல்லாமல் ஏதும் ஏற்பாடு செய்து கொடுக்க முடியாது என கூறியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறை வார்டன் முத்துராமன் பூந்தமல்லி போலீசில் புகார் அளித்ததின் பேரில் பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.