தமிழ்நாடு

ரூ.6 லட்சம் செலவில் போடப்பட்ட தரமற்ற சாலை: கைகளால் பெயர்த்து இருமுடி கட்டி நூதன போராட்டம்

webteam

மயிலாடுதுறை அருகே தரமற்ற முறையில் போடப்பட்ட சாலையை பெயர்த்து எடுத்து, இருமுடி கட்டி தலையில் சுமந்து பெருமாளிடம் முறையிட்டு மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சோழம்பேட்டை ஊராட்சி கோழிகுத்தி கிராமத்தில் பழமை வாய்ந்த ஒரே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் வானமுட்டி பெருமாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. கும்பாபிஷேத்தை முன்னிட்டு ஊராட்சி சார்பில் 210 மீட்டருக்கு 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை போடப்பட்டது.

விழாக்காலம் என்பதால் அவசரகதியிலும் தரமற்ற முறையிலும் சாலை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது சாலைக் கற்கள் பெயர்ந்து உருக்குழைந்து வருகிறது. கைகளாலேயே பெயர்த்து எடுக்கக் கூடிய நிலையில் சாலை போடப்பட்டுள்ளது. இதனை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வானமுட்டி பெருமாளிடம் தரமற்ற சாலை அமைத்தவர்களை தண்டிக்கக் கோரி நூதன போராட்டம் நடத்தினர்.

பொரியரிசி போல் பெயர்ந்து வரும் சாலையை கூட்டி அள்ளி பைகளில் நிரப்பி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வது போல் இருமுடி கட்டி ஜல்லிகளை தலையில் சுமந்து பெருமாள் கோயில் வந்தடைந்தனர். சாலை போடுவதாகக் கூறி பொதுமக்களுக்கு நாமம் போட்டு விட்டதாகவும், சாலைப் பணிகளை கண்காணிக்காத அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து முழக்கமிட்டனர்.

அரசின் கவனம் பெற வேண்டும் என்பதற்காக இந்த போராட்டத்தை நடத்தியதாகவும் மக்கள் பயன்பாட்டுக்கு போடப்படும் சாலைகள் தரமற்ற முறையில் போடப்படுவதை கண்காணிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.