தமிழ்நாடு

கிராமத்திலிருந்து ‌வெளியே செல்வதில் சிக்கல்..! அவதியுறும் கிராம மக்கள்

webteam

ராமநாதபுரம் அருகே உள்ள லாந்தை என்ற கிராமத்தில் ரயில்வே கீழ் பாலத்தில் மழை நீர் சூழ்ந்ததால் கிராம மக்கள் வெளியேற முடியாமல் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அவதிப்பட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே லாந்தை என்ற கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தார்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2016 ல் மதுரை -ராமேஸ்வரம் வழித்தடங்களில் 30 ரயில்வே கிராசிங்கை மூடிவிட்டு சுரங்கபாதைகள் அமைத்து வருகின்றனர். இதில் 28 இடங்களில் பணிகள் நிறைவடைய உள்ள நிலையில் லாந்தை மற்றும் கூரியூர் பகுதிகளில் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் பணிகள் முழுமையடைவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையின் பாதுகாப்போடு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் மழைநீர் ரயில்வே கீழ்பாலத்தில் சூழ்ந்துள்ளதால் கிராமத்திலிருந்து பொதுமக்கள் வெளியேற முடியாமல் அவதிக்குள்‌ளாகி வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறும்போது ”ஏற்கெனவே எங்கள் கிராமத்திற்குள் வர ரயில்வே கிராசிங் இருந்தது. ஆனால் அதனை அகற்றிவிட்டு சுரங்கப்பாதை அமைத்து வருகின்றனர். இதனால் எங்களது கிராமத்திற்குள் கதிர் அடிக்கும் இயந்திரம், லாரிகள் மற்றும் விவசாயம் செய்திட தேவையான இயந்திரங்களை கொண்டு வர முடியாது. நாங்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே வாழந்து வருகிறோம்” என்றனர்.

மேலும்  “எங்களது விளைபொருட்களைக் கூட சுரங்கப் பாதையில் லாரிகள் ட்ராக்டர்களில் எடுத்துச் செல்ல முடியாது என உயர் அதிகாரிகளிடம் கூறியிருந்தோம் ஆனால் அதிகாரிகள் எங்களது கோரிக்கைகைள ஏற்க மறுத்து மீண்டும் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் நான்கு வழிச்சாலை பணிகள் மேற்கொள்ள உள்ள நிலையில் சுரங்கப் பாதை அமைந்தால் எங்களது கிராம மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக மழைக்காலங்களில் எங்களால் கிராமத்தைவிட்டு வெளியேற முடியாத நிலை ஏற்படும் எனவே மாற்றுவழியில் பாதை அமைக்க வேண்டும்.” என்றனர்.

இதனைதொடர்ந்து கடந்த சில நாள்களாக பெய்த கனமழையின் காரணமாக நீர் அதிகளவில் தேங்கி நிற்பதால் அரசு பேருந்துகளை இயக்க முடியாத நிலையுள்ளதால் மாணவர்கள் பள்ளிக்கூடங்‌களுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடனடியாக நீரை அப்புறப்படுத்த மாவட்ட நி‌ர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.