தமிழ்நாடு

நெகிழி பயன்படுத்தினால் இன்று முதல் அபராதம் - அமலுக்கு வந்தது

நெகிழி பயன்படுத்தினால் இன்று முதல் அபராதம் - அமலுக்கு வந்தது

webteam

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நெகிழித் தடை‌ அமலில் இருக்கிறது. இந்நிலையில் கள்ளச்சந்தை மூலம் மீண்டும் நெகிழி பொருள்கள் பயன்பாட்டுக்கு வரும் என்பதால் நெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் நடைமுறையை தமிழக அரசு கொண்டுவந்தது. அதன்படி, தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், முதன்முறை பிடிபடும்போது 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அடுத்தடுத்து பிடிபடும் போது அபாரதத்தொகை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வசூலிக்கப்படும்.

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை சேமித்து வைத்தாலோ, வழங்கினாலோ, எடுத்துச் சென்றாலோ முதன்முறை ஒரு லட்சம் ரூபாயும், மீண்டும் பிடிபட்டால் 2 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். நெகிழி பொருட்களை விற்பனை, விநியோகம் செய்தால் முதன்முறை பிடிபடும்போது ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அத்தகைய செயல் தொடர்ந்தால் அபராதம் ஒரு லட்சமாக வசூலிக்கப்படும். தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை வணிக ரீதியில் பயன்படுத்துவோருக்கு முதன்முறை 25 ஆயிரமும், மீண்டும் பிடிபட்டால் ஐம்பதாயிரம் ரூபாயும் அபாரதம் விதிக்கப்படும்.

இதேபோல், தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை வீடுகளில் பயன்படுத்தினாலும் அபராதம் வசூலிக்கப்படும். பிடிபடுவது முதன்முறையாக இருந்தால் 500 ரூபாயும், மறுபடியும் கண்டறியப்பட்டால் ஆயிரம் ரூபாயும் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த நடைமுறை அனைத்தும் தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் தமிழகத்தில் தடை உத்தரவு அமலுக்கு வந்த பிறகு இதுவரை 250 டன் அளவுக்கு தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.