தமிழ்நாடு

அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது அவசியம் - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது அவசியம் - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

webteam

வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது அவசியம்தான் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

வாகனங்களை ஓட்டுபவர்கள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்ததை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று முறையிட்டார். அந்த மனுவில், பலர் வாடகைக்காக வாகனத்தை ஓட்டுபவர்கள் என்றும் அலுவலகங்கள் போன்றவற்றில் வாகன ஓட்டிகளாக பணியாற்றுபவர்கள் தங்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்திருப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இதுபோன்ற வாகன ஓட்டிகள் அசல் உரிமத்தை எடுத்து செல்ல இயலாது என்றும் அசல் தொலைந்தால் புதிய ஓட்டுநர் உரிமம் எடுப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

எனவே, பொதுமக்கள் நலனை கருதி, இந்த விவகாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி கோரிக்கை வைத்தார். அப்போது தலைமை நீதிபதி குறுக்கிட்டு, வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும், வாகனம் ஓட்டுபவர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது அவசியம்தான் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.