தமிழ்நாடு

கண்காட்சிக்கு வந்த மகாத்மா காந்தி பயன்படுத்திய கார்

கண்காட்சிக்கு வந்த மகாத்மா காந்தி பயன்படுத்திய கார்

webteam

இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழமையான கார் மற்றும் இருசக்கர வாகன கண்காட்சிக்கு மதுரையில் நடைபெற்றது.  

மதுரை அழகர்கோயில் சாலையிலுள்ள தனியார் தங்கும் விடுதி சார்பில் பழமையான கார் மற்றும் இருசக்கர வாகன கண்காட்சி நடைபெற்றது. மதுரையில் இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட இக்கண்காட்சியில் மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து 30 க்கும் மேற்பட்ட கார்கள், 15 க்கும் மேற்பட்ட பழமையான இருசக்கர வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த கார்கள் 1932, 1937, 1942 மற்றும் 1950 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட போர்டு, ஃபியட், மோரிஸ், சவர்லெட், வோல்ஸ்வாகன், அம்பாசிடர் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவு கொண்டு வரப்பட்டிருந்தன. மேலும் லேன்குலுசர், மாருதி சுசூகி உள்ளிட்ட கார்களும் இடம் பெற்றன. 

இந்தப் பழமையான வாகனங்களை தங்களின் பிள்ளைகளை போல் பராமரித்து வருவதாகவும், பராமரிபிற்காக தங்களின் அதிக நேரங்களையும், பணத்தினையும் செலவு செய்வதாகவும் இதன் உரிமையாளர்கள் கூறுகிறனர். மேலும், தங்களுக்குப் பிடித்த இந்த வாகனங்களில் பழுது ஏற்பட்டால் அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும், மும்பை, டெல்லி உள்ளிட்ட பிறமாநிலங்களிலிருந்தும் அதிக விலையில் பொருட்கள் வாங்கியேனும் அதன் மீது கொண்ட அதீத காதலால் அதனை சரி செய்வதாக கூறினர். மேலும் இந்த வாகனங்களை பல ஆண்டுகளாக பராமரிப்பதால் குடும்பத்திலும் பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பி.எஸ்.ஏ, இருசக்கர வாகனமும் இடம் பெற்றது. மகாத்மா காந்தி மதுரை வந்த போது, காரைக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடைய மோரிஸ் என்ற காரில் பயணம் செய்துள்ளார். அந்த காரும் இதில் இடம் பெற்றுள்ளது. 

கடந்த முறை நடந்த முதல் கண்காட்சியில் குறைந்தளவான பழமையான கார்கள் வந்தநிலையில் இந்தாண்டு நடைபெறும் இரண்டாவது கண்காட்சியில் பங்கேற்ற கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை கூடியுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அடுத்தாண்டு நடைபெற உள்ள கண்காட்சிக்கு அதிகளவு கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை அழைத்து, மதுரை நகர் பகுதியில் பழமையான வாகனங்களின் வாகன பேரணியும் நடத்தப்படும் என தெரிவிக்கின்றனர். 

இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் இந்தக் கண்காட்சி நடைபெற்றது. சுதந்திர தினம் என்பதால் அரசு விடுமுறை காரணமாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையிலும் பெண்கள் மற்றும் இளைஞர்கள் என ஏராளமான பொதுமக்கள் கண்காட்சியைக் கண்டு களித்து தங்களது செல் போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கண்காட்சிக்கு கொண்டு வரப்பட்ட அனைத்து கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் இன்றளவும் பயன்பாட்டில் நல்ல நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.