தமிழ்நாடு

பாதை விட சொல்லுங்க - மண்ணெண்ணெய் பாட்டிலோடு மனு கொடுக்க வந்த மூதாட்டி

பாதை விட சொல்லுங்க - மண்ணெண்ணெய் பாட்டிலோடு மனு கொடுக்க வந்த மூதாட்டி

webteam

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் மூதாட்டி ஒருவர் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் செம்பியந்த்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார்.   இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் சந்திரா வீட்டிற்கு செல்லும்போது பொது பாதையை அடைத்து அவர் வீட்டுக்குச் செல்ல முடியாமல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலவிடுதி காவல் நிலையம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் சந்திரா பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் சந்திரா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் மனுவை கொடுத்த போது சந்திரா தான் பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை வெளியே எடுத்தார்.

அப்போது உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரிடமிருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை வாங்கி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, போலீசார் அவரை தனியாக அழைத்துச் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க வைத்தனர்.