தமிழ்நாடு

அதிமுக - பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு, பாஜக போட்டியிடும் தொகுதிகள் நாளை அறிவிப்பு?

அதிமுக - பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு, பாஜக போட்டியிடும் தொகுதிகள் நாளை அறிவிப்பு?

JustinDurai

அதிமுக - பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும், பாஜக போட்டியிடும் தொகுதிகள் பட்டியலும் நாளை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அதிமுக - பாரதிய ஜனதா கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்றிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அதிமுக சார்பில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர். எல்.முருகன், அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் ஆகியோர் பாஜக தரப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு அமித் ஷாவுடன், ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் ஏற்கெனவே தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தியிருந்தனர். இந்நிலையில் நாளை தொகுதி பங்கீடு விவரம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் எல்.முருகன், பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், துணைத் தலைவர் அண்ணாமலை ஆகியோரை, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்காக கட்சி மேலிடம் நியமித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.