தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 31,892 - ஒரே நாளில் 288 பேர் உயிரிழப்பு

sharpana

தமிழத்தில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,000-ஐ தாண்டியது. சிகிச்சைப் பலனின்றி மேலும் 288 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 7 பேர் உள்பட 31,892 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரையிலான கொரோனா பாதிப்பு 15,31,377 ஆக அதிகரித்துள்ளது.

12 வயதுக்கு உட்பட்ட 1,183 சிறார்கள் 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஒரே நாளில் 20,037 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 13,18,982 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 288 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,056 ஆக அதிகரித்துள்ளது. இணைநோய் இல்லாத 68 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,95,339 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 6,538 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 3,197 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,225 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 1,410 பேரும், மதுரை மாவட்டத்தில் 1,250 பேரும், திருச்சி மாவட்டத்தில் 1,224 பேரும், கன்னியாகுமரியில் 2,025 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.